நமது குலக் கொடி

நமது குலக் கொடியின் சிறப்பு
நமது குலக்கொடி வெள்ளை நிறத்துணியில், நடுவே குந்தமும்,
அதன் வலது புறத்தில் சேவலும், இடது புறத்தில் புலியும் சின்னங்களாகக் கொண்டு
விளங்குகிறது. அதனை நாம் உணர்ந்து, சிரம் தாழ்த்தி வணங்குதல் வேண்டும்.
வெண்மை நிறம்
வெண்மை நிறம் நேர்மையைத் தெரிவிப்பது, தூய்மையை
விளக்குவது, எங்கும் எதிலும் தூய்மையாய் விளங்கும் குலமே செங்குந்தர் குலம்
என்பதை வெண்மை நிறம் வெளிப்படுத்துகிறது.
குந்தப்படை
வீரவாகு முதலிய நவவீரர்கள் தோன்றியபோது, அவர்களுக்கு
அன்னை ஆதிசக்தி கொடுத்த படையே குந்தப்படையாகும். முருகனுக்குத் துணையாய்
இருந்து, சூரன் முதலிய அசுரர்களை அழித்தது இப்படையே. முசுகுந்தனை மன்னர்
மன்னனாக்கி முசுகுந்த சோழன் என்று உலகம் புகழ வைத்ததும் இப்படையே. நமது
ஏற்றமிகு கொடியின் நடுநாயகமாகக் குந்தம் விளங்குவது நாம் பெற்ற பேராகும்.
சேவற் சின்னம்
முருகனது வேலுக்குத் தப்பியோடிய சூரபதும்மன், கடலுக்குள்
தலை கீழான மரமாய் நின்றான். அப்போது வேல் தப்பாது சென்று அம்மரத்தை இரு
பிரிவாக்கியது. அவைகளுள் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் வந்து முருகனை
எதிர்த்தன.
முருகன் அருளால் மாயை நீங்கி, மயிலும் சேவலும் இணங்கி வந்தன. அவற்றுள் மயிலை
வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் அவர் ஏற்றுக்கொண்டார். முருகனது
கொடிச்சின்னம், நமது கொடியில் இருப்பது நாம் அவரது குலம் என்பதை காட்டவேயாகும்.
புலிச்சின்னம்
முருகப்பெருமான் சூரனைக் கொன்றபின் அவனது கொடியாகிய
புலிக்கொடியை, வீரவாகுத் தேவரின் வீரத்திற்குப் பரிசாகத் தந்தார்.
புலிச்சின்னம் நவ வீரர்களின் அறம் நிறைந்த வீரத்திற்கும், அவர்கள் வழிவந்த
செங்குந்தர் குலத்திற்கும் கிடைத்த பரிசாகும்.
சோழ மன்னர்களுக்கும் புலிச்சின்னமே கொடிச்சின்னம் ஆகும். வீரவாகுத் தேவரின்
மகள் சித்திரவல்லியைச் சோழன் முசுகுந்தன் மணந்து கொண்டு அங்கிவன்மனைப்
பெற்றான். வீரவாகுத் தேவர் புண்பகந்தியை மணந்து கொண்டு, அனகன் என்ற மகனைப்
பெற்றார். புண்பகந்தி சோழ மரபில் தோன்றியவள்.
அங்கிவன்மனும், அனகனும் முறையே கருவூரிலும், காஞ்சியிலும்
இருந்து கொண்டு சோழப்பேரரசை நடத்தி வந்தனர்.
எனவே, செங்குந்தர் குலம் சோழ மரபோடு இரண்டறக் கலந்து ஒரு காலத்தில் நாடு ஆண்ட
குலம், என்பதையும் இப்புலிச்சின்னம் புகட்டுகிறது.
நமது கடமை
சொல்லிலே பொருளைக் காண்கிறோம், கல்லிலே கடவுளைக்
காண்கிறோம். அதுபோலவே, கொடியிலே, அது உணர்த்தும் கொள்கைகளை காண வேண்டும்.
அவ்வாறு, அவைகளை உணர்ந்து நாம் எடுக்கும் விழாக்கள் எதுவாயிலும், அவற்றின்
துவக்கத்தில் கொடியேற்றி, வணங்கி, நம் குலத்திற்கு நலம் தரும் உறுதிமொழிகளை
எடுத்துக்கொள்ளுதல் என்றும் நமக்கு ஏற்றம் தரும்.
வாழ்க! வாழ்க! செங்குந்தர்! வெல்க! வெல்க!
செங்குந்தர்!
|